நாளை உருவாகும் புதிய புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
“புயல்”
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை புயலாக வலுவடைந்து வடமேற்கு நகர்ந்து மே 10-ம் தேதி வடஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் நிலவும். வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு – வடகிழக்கில் நகர்ந்து ஒடிசா கடற்கரையில் நீடிக்கும்.
கனமழை பெய்யும்
இந்த புயலின் எதிரொலியாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 9ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.