எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேலையில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதலமைச்சர், கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது என்றார். அரசின் தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு குறைந்ததாகவும் அவர் கூறினார்.
தயாராக இருங்கள்
தமிழகத்தில் 91% பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றார். கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.