தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
தைப்பூசம்
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இந்த விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி செவாய்க்கிழமையான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளோடு, சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருந்தால் நல்ல பல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
மகாதீபாராதனை
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் நாள் திருவிழா நேற்றிரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்தது. வள்ளிதெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.
குவியும் பக்தர்கள்
தைப்பூச விழாவையொட்டி பழனியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பால் காவடி, பன்னீர் காவல்டி, புஷ்ப காவடி சுமந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த சில நாட்களாகவே பாத யாத்திரையாக பழனி நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அரோகரா கோஷம் முழங்க அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.