உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
சிறப்பு பிரார்த்தனை
சென்னையில் உள்ள மிக பழமையான சாந்தோம் செயின்ட் தாமஸ் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. புத்தாடைகள் அணிந்து குடும்பத்தினருடன் வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ மக்கள் இயேசு கிறிஸ்துவின் பெருமைகளை வெளிப்படுத்தும் பாடல்களை பாடி மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். நேற்றிரவு மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. பின்னர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
மனம் உருகி வழிபாடு
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பக்தர்கள் அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்து வழிபட்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில் பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டிருந்தது.