ஆந்திராவில் ‘புஷ்பா’ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ஆடியோ கேட்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டரை சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
‘புஷ்பா’
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புஷ்பா’. இதில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘புஷ்பா’ திரைப்படம் நேற்று வெளியானது.
வசூல் சாதனை
இந்த படத்திற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா, எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் முதல் நாளிலேயே சுமார் ரூ.40 கோடி வசூல் சாதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் ரகளை
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு பழனி திரையரங்கில் ’புஷ்பா’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. அப்போது ஆடியோ கேட்கவில்லை எனக்கூறி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள், தியேட்டரில் உள்ள சேர்களை அடித்து நொறுக்கினர். அதுமட்டுமின்றி ஆப்ரேட்டர் ரூமுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரசிகர்களை சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக பழனி திரையரங்கம் உள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.