சினிமாவிற்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாகவும் தற்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
சிறந்த நடிகை
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை பூர்ணா, மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். நடிகை பூர்ணா கேரளாவில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி மீண்ட சம்பவம் சமீபத்தில் பரபரப்பானது.
ஜாக்கிரதையாக இருக்கிறேன்
இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பூர்ணா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; பிரபலங்கள் பொது சொத்து என்பது எனது கருத்து. எனக்கு இந்த ஆண்டு முதல் நல்ல கதாபாத்திரங்கள் வந்தன. ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்து வரவில்லை. நான்கைந்து காட்சிகளில் வந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் கிடைத்தால் போதும். சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இவ்வாறு பூர்ணா கூறியுள்ளார்.