வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை

நாளை (நவ.,05) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எடப்பாடி, மோகனுார் தலா 9 செ.மீ, வெம்பக்கோட்டை 8 செ.மீ, மேட்டூர் 7 செ.மீ, திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம் தலா 5 செ.மீ, நாகர்கோவில், சிவகாசி தலா 4 செ.மீ, வால்பாறை, சின்னக்கல்லார், ராஜபாளையம், குன்னுார், தேக்கடி, தாளவாடி பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் புயல் காற்று வீசக்கூடும் எனவும் நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, ஆந்திரா மற்றும ஒடிசா கடலோர பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here