அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட முறையே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல்
அதிமுக சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது வழக்கம். அதன்படி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் டிச.,3 மற்றும் டிச.,4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. டிச.,5-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. டிச.,7-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவும், டிச.,8-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
வேட்பு மனுத் தாக்கல்
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செலவ்மும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர்கள், தேர்தல் ஆணையர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.