பண மோசடி செய்ததாக தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் சினேகா நடித்துள்ளார். நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் காதலித்து வந்த நிலையில், இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.
போலீசில் புகார்
இந்த நிலையில் நடிகை சினேகா சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனியார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்துக்கு பெரும் தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசைக்காட்டியதன் பேரில், ஆன்லைன் மூலம் ரூ.25 லட்சமும், நேரில் ரூ.1 லட்சமும் கொடுத்ததாகவும் இதற்காக மாதம் ரூ.1.80 லட்சம் லாபம் தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐந்து மாதம் ஆகியும் பங்கு தொகையும் தராமல், அசல் தொகையும் தராமல் இருப்பதாக அந்த மனுவில் சினேகா கூறியுள்ளார். தற்போது வட்டி தொகை கேட்டதற்கு அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும் நடிகை சினேகா அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பண மோசடி தொடர்பாக நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.