தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை’ சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
விலை உயர்வு
தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கட்டுமான நிறுவனங்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டார்.
‘வலிமை’ அறிமுகம்
இந்நிலையில், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை’ சிமெண்ட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் மலிவு விலை சிமெண்ட்டான ‘வலிமை’யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
மலிவு விலை சிமெண்ட்
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் இந்த மலிவு விலை சிமெண்ட், ஒரு மூட்டை ரூ.360க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் வெளி சந்தையில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘வலியதோர் உலகம் செய்வோம்’ எனும் கருத்தை மையமாக கொண்டு, குறைந்த விலையிலும், நிறைந்த தரத்திலும் ‘வலிமை’ சிமெண்ட் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.