சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனைபட தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை
கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
முதலமைச்சர் வேதனை
இந்த நிலையில், கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது; கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.