உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு தாக்கல்

தமிழகத்த்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்.,15-ம் தொடங்கியது. உள்ளாட்சி தேர்தலில் 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் 41,93,996 வாக்காளர்களும், 2 ஆம் கட்ட தேர்தலில் 34,65,724 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தேர்தல்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தனித்து போட்டி

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here