தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் மரியாதை

திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்பட திமுகவினர் பலர் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

‘சமூக நீதி நாள்’

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்’ உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், ‘சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசிக்க, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here