சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசியல், கலை, இலக்கியம், நாடகம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய கருணாநிதி, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளதாக எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் நிலைத்து நிற்கும் என்றார்.