கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வெடுக்கும் பங்களா உள்ளது. இதில், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ல் ஓம் பகதுார் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த சையன், மனோஜ் உள்ளிட்டோர் கைதாகி, ஜாமினில் உள்ளனர். இவர்களிடம் மீண்டும் விசாரணை நடந்து வருகிறது.
கடும் எதிர்ப்பு
கொடநாடு விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ததுடன், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தில் கொடநாடு விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்க ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதிமுகவுக்கு பயம் இல்லை
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றார். அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காகவே இந்த விவகாரம் பேரவையில் விவாதிப்பதாக கூறினார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டமன்றத்தில் விவாதித்தது விதிமீறல் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் விவாதிக்க ஏராளமான மக்கள் பிரச்சினைகள் உள்ள நிலையில், கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.