ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது அங்கு ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அசாதாரணமான சூழல்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டின் பெயரை ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்’ என மாற்றியுள்ளனர். இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள தூதரக அதிகாரிகளை ஒவ்வொரு நாடுகளும் திரும்ப அழைத்து வருகின்றன. அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி, தன்நாட்டு மக்களை பத்திரமாக அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்க படைகளை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்ற விதம், திட்டமின்றி படைகளை வாபஸ் வாங்கியது போன்றவை தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற மிக முக்கிய காரணங்களாக விமர்சனங்களுக்குள்ளாகி உள்ளது.
தங்கள் வேலை இல்லை
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவரித்தார். ஆப்கனில் நடக்கும் விஷயங்களை பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறினார். மேலும் ஆப்கானிஸ்தானில் நாட்டை கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க படைகள் அங்கு செல்லவில்லை எனவும் அது தங்கள் வேலையும் இல்லை என்றும் அதிபர் குறிப்பிட்டார். அல்-கொய்தாவை முறியடிக்கவும், ஒசாமா பின்லேடனை பிடிக்கவும் இந்தப் போர் தொடுப்பு நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர், எப்போது படைகள் வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும் என்றார்.
ஏன் எதிர்க்க வேண்டும்?
ஆப்கன் அரசும், படையும் தலிபானை எதிர்க்காத பட்சத்தில் நாம் ஏன் அவர்களை எதிர்க்க வேண்டும்? என அதிபர் ஜோ பைடன் கேள்வி எழுப்பினார். ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என்றும் போரில் அமெரிக்கர்கள் தங்கள் உயிரை பறிகொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.