அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வர வேண்டும் எனவும் தலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாடு திரும்பும் அதிகாரிகள்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டின் பெயரை ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்’ என மாற்றியுள்ளனர். இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள தூதரக அதிகாரிகளை ஒவ்வொரு நாடுகளும் திரும்ப அழைத்து வருகின்றன. அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி, தன்நாட்டு மக்களை பத்திரமாக அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்க படைகளை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்ற விதம், திட்டமின்றி படைகளை வாபஸ் வாங்கியது போன்றவை தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற மிக முக்கிய காரணங்களாக விமர்சனங்களுக்குள்ளாகி உள்ளது.
பொது மன்னிப்பு
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பீதியடைந்த அரசு ஊழியர்கள், அப்படியே அலுவலகத்தை போட்டு விட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டனர். தலிபான்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் அவர்கள் கருதினர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்பி வர வேண்டும் எனவும் தலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் தொடர்பாக தலிபான்கள் எந்த அறிவிப்பும் வெளியிடாததால், அவர்கள் மரண பீதியில் இருக்கின்றனர்.