தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
பரவலாக மழை
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழல், அம்பத்துாரில் தலா 4 செ.மீ., பெரம்பூரில் 3 செ.மீ., வால்பாறை, சென்னை நுங்கம்பாக்கம், நீலகிரி மாவட்டம் தேவலா பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.