18 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்கியதையடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது. முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே ஏராளமான இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.
முதல்வர் வேண்டுகோள்
இந்த நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.