கொரோனா தடுப்பு மருந்தான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து, மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விலை நிர்ணயம்
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், மீதமுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், திறந்த சந்தைகளிலும் விற்க அனுமதி அளித்தது. இவ்வாறு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் விலையை உற்பத்தியாளர்களே நிர்ணயிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, சீரம் நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிரடி உயர்வு
ஒரு டோஸ் ‘கோவிஷீல்டு’ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் கொரோனா தடுப்பூசி விலையை விட மலிவானது என சீரம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.