கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிபியிடம் புகார்
நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துக்களை கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி தொடர்பாக அவதூறு பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கொரோனா தடுப்பூசிக்கும், நடிகர் விவேக் மரணத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
கடும் கட்டுப்பாடுகள்
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் கடுமையாகும் என்றும் திருமண மண்டபம், ஹோட்டல், துக்க நிகழ்ச்சிகளில் கூடும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் பிரகாஷ் தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறினார். சென்னையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது. கடும் கட்டுப்பாடுகள் மட்டுமே இருக்கும் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.