முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

அவதூறு பேச்சு?

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. ராசாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆ. ராசா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. 

மன்னிப்பு

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஆ. ராசா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; 2 நாட்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து தான் பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து தன்னிலை விளக்கம் அளித்தேன். இருப்பினும் அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் கூடலூர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி குறித்தோ, அவரது அன்னை குறித்தோ தான் தவறாகப் பேசவில்லை. ஆனாலும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன்.

தவறாக பேசவில்லை

இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் முதலமைச்சர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் தயக்கமில்லை. எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு. முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாக பேசவில்லை என தீர்ப்பளிப்பர். இவ்வாறு ஆ. ராசா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here