தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலை முதலே புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

உற்சாக கொண்டாட்டம்

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியது. காலையில் எழுந்து நீராடிய மக்கள், பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளதால், ஒருசில பகுதிகளில் மக்கள் எளிமையாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

சாமி தரிசனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டாலும், பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியை மக்கள் கடைபிடிக்காததை பார்க்க முடிகிறது. 

கட்டுப்பாடு

நோய் பரவல் அதிகரிக்கும் என்பதால் பட்டாசுகளை வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமான அளவை விட குறைந்த அளவிலேயே மக்கள் பட்டாசுகளை வெடிக்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வழக்கமான உற்சாகத்துடன் மக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலை மறந்து வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here