தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி 9 செ.மீ., திருக்கழுக்குன்றம், பள்ளிப்பட்டு, திருச்சுழி தலா 5 செ.மீ., அரூர், ஆலங்காயம், உத்திரமேரூர் தலா 4 செ.மீ., தேன்கனிக்கோட்டை, போளூர், பெருந்துறை, வத்தலை அணை, காமாட்சிபுரம், குன்னூர், மானாமதுரை, பாலவிடுதி பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.