தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது செப்டம்பர் 3 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் இருந்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முதலமைச்சர் முடிவெடுப்பார்
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை என்றார். 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் இருக்குமானால், பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை செய்த பிறகு, வருவாய் துறை, பள்ளிக் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளிடம் பேசி இறுதி முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும் அமைச்சர் கூறினார்.