திரைத்துறையில் பெண்கள் மட்டும்தான் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்களா? ஆண்களுக்கு அந்தப் பழக்கம் கிடையாதா? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சிக்கும் நடிகைகள்
பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்குப் பிறகு, பாலிவுட் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திரைத்துறையில் போதைப் பொருள் பழக்க விவகாரம் தலை தூக்கவே, தற்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் விசாரணையை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சுஷாந்த் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர், சுஷாந்த்தின் முன்னாள் மேலாளர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீபிகா படுகோனா, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கன்னட திரையுலகிலும் போதைப் பொருள் விவகாரம் புயலைக் கிளப்பிய நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஷ்பு கேள்வி?
இந்த நிலையில், போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். திரைத்துறையில் பெண்கள் மட்டும்தான் போதை மருந்து பழக்கம் இருப்பவர்களா? ஆண்கள் கிடையாதா? இல்லையென்றால் பெண்களை மட்டும்தான் கேள்வி கேட்டு, விசாரணை செய்து, சம்மன் அனுப்பி, அவதூறு பேச வேண்டும் என்பது விதியா? இந்த வழக்கம் எனக்குப் புரியவில்லை’. இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.