உடல்நலக்குறைவால் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற எஸ்பிபிக்கு, திடீரென பாதிப்பு அதிகமானதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனையடுத்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிரிழந்ததாக அவரது மகன் எஸ்.பி. சரண் அறிவித்தார். எஸ்.பி.பி.யின் மரணச் செய்தியை அறிந்து திரையுலகினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கலையுலகத்துக்கு பெரும் இழப்பு
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இசை உலகம் எஸ்.பி.பி.யை இழந்துவிட்டதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; பாடகர் பாலசுப்ரமணியத்தின் மரணம் நமது கலையுலகத்துக்கு பெரும் இழப்பு. எல்லா குடும்பங்களிலும் அவரது பெயர் ஒரு அங்கம், அவரது இசை பல ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்தது. இந்த துயரமான நேரத்தில் பாடகர் எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன்’. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர், தலைவர்கள் இரங்கல்
எஸ்.பி.பி. மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியியுள்ளதாவது; “இனிமையான இணையற்ற குரல் வல்லமை கொண்ட திரு. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. மிக அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்து புகழின் உச்சிக்கே சென்ற எஸ்.பி.பி அவர்களின் மறைவு திரைத்துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு!” எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு. S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் எனக் கூறியுள்ளார். இதேபோல், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
‘அன்னைய்யா’
எஸ்.பி. பாலசுப்ரணியத்தின் மறைவு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், நூறாண்டுகள் ஆனாலும் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; “என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எஸ்.பி.பி.யுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் வீடியோ தொகுப்பையும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். இதேபோல் வைரமுத்து, டி. ராஜேந்தர், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், அனிருத், டி. இமான், நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட மற்ற துறைகளைச் சார்ந்தவர்களும் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நல்லடக்கம்
மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை செங்குன்றம் அருகே தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.