தொடர்ந்து 4வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் சரிவு
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு சவரன் விலை 43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஒரு சவரன் 39,664க்கு விற்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை குறைந்தது. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்து ரூ.38,800க்கு விற்கப்பட்டது. 3வது நாளான நேற்று ரூ.320 குறைந்து ரூ.38,480க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் ஒரு கிராமுக்கு ரூ.4820ஆக அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,560 ஆக இருந்தது. இந்த நிலையில், 4வது நாளாக இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.4,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.520 குறைந்து 38,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மக்கள் மகிழ்ச்சி
வெள்ளி விலையும் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.70 காசுகள் குறைந்து 60 ரூபாய் 60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களாக சவரனுக்கு ரூ.1624 குறைந்திருப்பது நகை வாங்குவோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.