கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி வரும் மண்டல, மகர விளக்கு காலங்களில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு விதிப்பு
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜை காலங்களில், சுவாமி தரிசனம் செய்ய ஆண்டுதோறும் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கொரோனா காலம் என்பதால், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
5000 பேருக்கு மட்டுமே அனுமதி
அதன்படி, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நிலக்கல்லில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு விதித்துள்ளது.