நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனக் கூறியுள்ள நீதிமன்றம், விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது.
அறிக்கை, எதிர்ப்பு
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை – எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
நீதிமன்றம் அறிவுரை
இந்நிலையில், நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என முடிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. பொது விவகாரங்கள் குறித்து பேசும்போது கவனம் தேவை என்றும் நீதி மன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது என்றும் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட்டு 42,233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.