தனது பிரதிநிதியாக முன்னுறுத்திக் கொள்பவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித் வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மோசடி புகார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் அஜித், எந்தவொரு வம்பு தும்புகளிலும் சிக்காமல் அவரது வேலையில் கவனம் செலுத்தி வருவார். இந்த நிலையில், அஜித்தின் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் சிலர், அவரது பெயரை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பண மோசடியில் ஈடுபடுவதாகவும் வெளியான தகவலை அடுத்து, அஜித்தின் சட்டப்பூர்வ ஆலோசகர் அஜித் குமார் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
எச்சரிக்கை
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; “நான் திரு. அஜித் குமார் அவர்களின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் திரு. அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும். சமீப காலமாக ஒருசில தனி நபர்கள் பொது வெளியில் என் காட்சிகாரர் சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப் படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது. இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் திரு. சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்த தகவலை திரு. சுரேஷ் சந்திரா அவர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுக்கோள் விடுக்கிறார். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிகாரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியிலும் மற்றும் சினிமா வட்டாரத்திலும் சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.