உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறி ஆடியோ வெளியிட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நலக்குறைவால் அவதி
மதுரையைச் சேர்ந்தவர் முரளி. ரஜினி ரசிகரான இவர், ரஜினிகாந்த் மன்றத்தை முதலில் தொடங்கியவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மும்மையில் உள்ள மருத்துவமனையில் முரளி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது. “தலைவா, என் இறுதி ஆசை 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25k என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினிகாந்த ஆறுதல்
இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகருக்காக ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது; “உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடஞ்சி நீங்க வீட்டுக்கு வருவீங்க. நீங்க குணமடைந்து வந்த பிறகு ப்ளீஸ் குடும்பத்தோடு எங்க வீட்டுக்கு வரணும். நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமா இருங்க. நான் ஆண்டவனை வேண்டுகிறேன். தைரியமா இரு கண்ணா”. இவ்வாறு ரஜினிகாந்த் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். இதனையறிந்த ரஜினி ரசிகர்களும், சிகிச்சை பெற்று வரும் முரளிக்காக கடவுளிடம் வேண்டுவதாகவும், தைரியமும் கூறி வருகின்றனர்.
மகிழ்ச்சியில் ரசிகர்
ரஜினிகாந்த்தின் குரலை கேட்ட முரளி, “ஆசீர்வாதம் கிடைத்தது. அதிசயம் நடந்தது. அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகட்டிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரியாகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.