சென்னை பல்லாவரம் மற்றும் வண்டலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
வண்டலூர் மேம்பாலம்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சந்திப்பு அருகே ரூ.55 கோடியில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 711 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து, போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், கோயம்பேடு மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றார்.
“யூ” வடிவ மேம்பாலம்
இதேபோல், சென்னை பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி. சாலையுடன் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில், 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், 30 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள் மற்றும் புறவழிச்சாலையை திறந்து வைத்த முதல்வர், சென்னை ராஜீவ் காந்தி சாலையில், டைடல் பார்க் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 108 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 “யூ” வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.