சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பட பாடலுக்கு எதிரான புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘OTT சர்ச்சை’
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ‘சூரரைப் போற்று’ நிச்சயம் OTTயில் தான் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் தெளிவுபடுத்தினர். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நீதிமன்றம் உத்தரவு
அதில் ஒரு பாடலில், சாதி பிரச்சனையை தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, தருமபுரி மாவட்டம் அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சூரரைப் போற்று’ படத்தில் வரும் “மண் உருண்ட மேலே மனுஷன், மனுச பையன் ஆடுற ஆட்டம் பாரு” என்ற பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் தவறான எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்றும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை பெரிதாக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இதுகுறித்து கடந்த மார்ச் 20ம் தேதி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிபாளருக்கு தபால் மூலம் புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் மீண்டும் புகார் மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் அந்தப் புகாரை சட்டப்படி பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
டார்கெட்?
நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா குரல் கொடுத்ததால் அவர் டார்கெட் செய்யப்படுகிறார் என சூர்யாவின் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ‘அகரம் பவுண்டேஷன்’ மூலம் சூர்யா பல மாணவர்களை படிக்க வைக்கிறார், அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார், சூர்யா தம்பியும், நடிகருமான கார்த்தி விவசாயத்திற்காக குரல் கொடுக்கிறார் என ஒட்டுமொத்த குடும்பமே நாட்டு நலனுக்காவும், சமுதாயத்திற்காகவும் குரல் கொடுக்கும் நிலையில், அவர்களை பலர் டார்கெட் செய்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே OTT பிரச்சனையை சந்தித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளதால் திட்டமிட்டபடி அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.