காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரியில் லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறை 3 செ.மீ., சோத்துப்பாறை, ஆத்தூர் தலா 2 செ.மீ., சின்னக்கல்லார், சோலையார், பந்தலூர் தாலுகா அலுவலகம், ஓசூர், தோவாலா, ஓமலூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம், ஜமுனாமரத்தூர், திருவள்ளூர், கூடலூர் பஜார், மேல் கூடலூர் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்கரை பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.