கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தோவாலா 21 செ.மீ., நாமக்கல் 13 செ.மீ., பென்னாகரம், அகரம் சிகூர் தலா 8 செ.மீ., உளுந்தூர்பேட்டை, கலசப்பாக்கம், சேந்தமங்கலம், செய்யார், வால்பாறை தலா 7 செ.மீ., பூண்டி, சின்னக்கல்லார், வேப்பந்தட்டை, தேன்கனிக்கோட்டை, குடியாத்தம் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here