பெங்களூரு பூங்காவில் தகராறில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இளம் நடிகை
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே. அந்த படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த அவர், தொடர்ந்து வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோவை அடிக்கடி பதிவு செய்து வருகிறார். இதற்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.
பூங்காவில் தகராறு
சமீபத்தில் நடிகை சம்யுக்தாவும், அவரது நண்பர்களும் பெங்களூருவில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி என்பவர், அவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. கவிதா ரெட்டியுடன் அங்கிருந்த இன்னும் சிலர், தன்னையும் தனது தோழிகளையும் தகாத முறையில் திட்டி இழிவுபடுத்தியதாக சம்யுக்தா ஹெக்டே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், சம்யுக்தாவும் அவரது நண்பர்களும் பூங்காவில் இருந்தவர்களைத் தொந்தரவு செய்யும் வகையில் சத்தமாக இசை வைத்து உடற்பயிற்சி செய்ததாகவும், அதைக் கேட்டபோது தன்னை அவதூறாகப் பேசிய பிறகுதான் கடுமையாக நடந்து கொண்டேன் என்றும் கவிதா ரெட்டி குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக இரு தரப்பினருமே பெங்களூரு போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர்.
மன்னிப்பு கேட்ட பிரமுகர்
இந்நிலையில் சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவருடைய தோழிகளிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கவிதா ரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது; செப்டம்பர் 4ம் தேதி அன்று நடந்த அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சம்யுக்தாவையோ, அவரது தோழிகளையோ நான் தாக்கவில்லை. எனினும் நான் நிதானத்தை இழந்து கோபப்பட்டதற்காக நான் அவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆக்ரோஷமான வார்த்தைகளை நான் பயன்படுத்தினேன் என்பதை என்னால் நினைத்து பார்க்கமுடியவில்லை. நிச்சயமாக அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஒரு பொறுப்புள்ள குடிமகளாகவும், முற்போக்கு சிந்தனையுள்ள பெண்ணாகவும் சம்யுக்தாவிடமுமும், அவரது தோழிகளிடமும் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாரு கவிதா ரெட்டி தெரிவித்துள்ளார்.