தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது செப்டம்பர் 3ஒம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமலும், எப்போது திறக்கப்படும் எனத் தெரியாமலும் இருந்து வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சாத்தியமில்லை
இந்நிலையில், பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் அடுத்தாண்டு பள்ளிகள் திறந்தாலும், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறு இல்லை என்றார். தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், வேலையில்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால், அரசு பள்ளியில் தற்காலிக பணி வழங்கப்படும் எனக் கூறினார்.