வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் மஞ்சளாறு 11 செ.மீ., பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலகம் 10 செ.மீ., தல்லாகுளம் 9 செ.மீ., பெரியகுளம், விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணை தலா 8 செ.மீ., மேட்டூர், மடத்துக்குளம், ரிஷிவந்தியம் தலா 6 செ.மீ., ஓட்டன்சத்திரம், அரண்மனைப்புதூர், மூங்கில்துறைப்பட்டு, வீரபாண்டி தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.