தயாரிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டி. ராஜேந்தர் அறிக்கை
தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி. ராஜேந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து டி. ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “இன்றைக்கு வந்திருக்கலாம் OTT தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது.
சட்டப்படி நடவடிக்கை
OTT தளத்திலே நட்சத்திர அந்தஸ்துள்ள படத்தை வாங்குவார்கள். ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா? தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்களும் இருக்கிறார்கள். OTT என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட வினியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிடக்கூடாது. காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். 8 சதவிகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கப்படும். இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமை சம்பந்தமாக வினியோகஸ்தர்களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமலும், வினியோகஸ்தர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்காமலும், அப்படத்தினை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத்தினை OTTயில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்பப் பெற்று சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.