தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துக்கொண்டு முன்னணி நடிகராக விளங்கும் விஜய் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார்.

தவறவிட்ட வாய்ப்புகள்
இயக்குநர்கள் ஒரு கதையை உருவாக்கிய பிறகு, அந்த கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்குமென யோசித்து அந்த நடிகரை அணுகுவது சாதாரணமான ஒன்று தான். ஆனால், அந்த நடிகர்கள் அச்சமயத்தில் பிஸியாக இருந்துவிட்டால் அப்பட வாய்ப்புகளை தவறவிட்டு விடுகின்றனர். அதனால் இயக்குநர்களும் வேறு நடிகர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், தளபதி விஜய்க்காக உருவாக்கப்பட்ட முக்கியமான படங்கள், அதை தவறவிட்டதால் மற்ற நடிகர்கள் நடித்து ஹிட் அடித்த படங்களின் லிஸ்ட்டை சற்று ரீ வைண்ட் செய்து பார்ப்போம்.
முதல்வன்
1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, மணிவண்ணன் ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘முதல்வன்’. அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகும் என்று முழு விறுவிறுப்புடன் காதல் கலந்த அரசியல் கதைக்களத்தோடு, ஷங்கர் கச்சிதமாகவே இப்படத்தை படைத்தார். முதன்முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு விஜய்யிடம் தான் சங்கர் அணுகினாராம். ஆனால் அரசியல் சார்ந்த படம் என்பதால் விஜய் நடிக்க தயங்கி காட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகே அர்ஜுன் நடித்து மெகா ஹிட்டானது.

ரன்
லிங்குசாமி இயக்கத்தில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘ரன்’. மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன், விவேக் உட்பட பலர் நடித்திருந்த இப்படம் மெகா ஹிட்டானது. வித்யாசாகர் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தாளம் போட வைத்தது. காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில் நடிக்க, லிங்குசாமி விஜய்யை அணுகியதாகவும், ஆனால் அச்சமயத்தில் அவர் வேறொரு படத்தில் பிசியாக இருந்ததால் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. அதனால் மாதவன் நடிப்பில் ‘ரன்’ படம் வெளியாகி மெகா ஹிட்டானது. மேலும் தெலுங்கிலும், இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 
ஆட்டோகிராஃப்
2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆட்டோகிராஃப். இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த சேரன், நாயகனாகவும் நடித்தார். மேலும் கோபிகா, சினேகா, மல்லிகா என்று நட்சத்திரப் பட்டாளங்களே இப்படத்தில் ஒன்று கூடினர். தமிழில் ஹிட்டான இப்படம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி என்று பல மொழிகளில் வெளியானது. ஒவ்வொரு காலகட்டத்தில், காதல் வெற்றியும் தோல்வியும் எப்படி எல்லாம் இருக்கும் என்று அழகாகவே காட்டினர். இப்படத்தில் நடிக்க விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களிடம் பேசியுள்ளனர். ஆனால் யாரும் ஒப்புக் கொள்ளாததால் தானே நடிக்க முன்வந்துவிட்டார் சேரன். ஆட்டோகிராஃப் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் தேசிய விருதும் கிடைத்தது. இப்படம் ரிலீஸூக்கு பிறகு மெகா ஹிட் ஆனதை பார்த்த விஜய், சேரனை பாராட்டியதாக கூறப்படுகிறது.
சண்டக்கோழி
2005 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படம் சண்டக்கோழி. இப்படத்தை எழுதி, இயக்கியவர் லிங்குசாமி. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன் போன்ற பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் நடிக்க முதலில் சூர்யாவிடம் லிங்குசாமி பேசி இருக்கிறார். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே, விஜய்யிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் விஜய்யும் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பிறகே அந்தக் கதை விஷாலிடம் சென்று இருக்கிறது. விஷால் ஒப்புக்கொண்டு நடித்த இப்படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
அனேகன்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த திரைப்படம் ‘அனேகன்’. தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்திக் போன்ற பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என்று பல மொழிகளில் வெளிவந்தது. ‘அனேகன்’ கதையை எழுதி முடிக்கவே கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எடுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். பிறகு இந்தக் கதையை விஜய்யிடம் கூற, அந்த நேரத்தில் அவர் ஜில்லா, கத்தி போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். மேலும் இப்படத்தில் தனுஷ் நடித்தால் நல்லா இருக்கும் என்று விஜய், தனுஷ் பெயரை பரிந்துரைந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஆனந்த். விஜய் சொன்னது போலவே தனுஷ் நடிப்பில் உருவான ‘அனேகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுபோன்று பல முக்கியமான ஹிட் படங்களை தவறவிட்டிருக்கிறார் நடிகர் விஜய்.















































