இந்தியாவில் ஏற்கனவே 58 க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது.
மோதல்
எல்லைப்பகுதியில் இந்திய – சீன வீரர்களிடையே சில நாட்களாக மோதல் நிலவி வந்தது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலின் போது இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், சீன பொருட்களையும் இந்திய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினர். இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரும், சீன பொருட்கள் மீது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால், இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்தது.
அதிரடி தடை
அதன்பின் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சீனா தனது ராணுவத்தை பின்வாங்க மறுத்தது. கடந்த சில தினங்களாக சீன ராணுவம் அத்துமீறியுள்ளது. இந்த நிலையில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.