வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

பரவலாக மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், பரமக்குடி 13 செ.மீ., வேடசந்தூர், வேடசந்தூர் புகையிலை தோட்ட அலுவலகம் தலா 11 செ.மீ., காங்கேயம் 10 செ.மீ., ஆண்டிபட்டி 9 செ.மீ., திருச்சி மாவட்டம் நாவலூர் 8 செ.மீ., மேட்டுப்பட்டி, கரூர் மாவட்டம் பாலவிடுதி, திருப்பூர் தெற்கு, சேந்தமங்கலம் தலா 7 செ.மீ., ஒகேனக்கல், பென்னாகரம், கலசப்பாக்கம், வேலூர் மாவட்டம் வடபுதுப்பட்டு தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், கேரள கடலோர மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here