உடல்நலக் குறைவால் மரணமடைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
பிரனாப் மரணம்
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அவசரமாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம், பிரணாப் முகர்ஜியின் மூளையில் இருந்த மிகப்பெரிய ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. முன்னதாக பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. மூளையில் நடந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது. 22 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இறுதிச்சடங்கு
அவரது மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் செப்டம்பர் 6ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிக்கு பின் ராஜாஜி மார்க்கில் அவரது உடல், பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்படும் என்றும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரனாப் முகர்ஜியின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேற்குவங்க மாநிலத்தில், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.















































