மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிக்கியிருக்கும் நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக நடிகைகள் சிலர் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
ரியா தான் டார்கெட்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட நாள் முதல், பாலிவுட்டில் பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றது. சுஷாந்த் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அனைவரும் டார்கெட் செய்வது அவரது காதலியான ரியா சக்ரபோர்த்தியைத் தான். சுஷாந்த் சிங் மரணத்திற்கு ரியா தான் முழு காரணம் என அவரது குடும்பத்தினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ரியா சக்ரபோர்த்தியின் வாட்ஸ்-அப் மெசேஜ்கள் அனைத்தும் வைரலாக பரவி வந்தது. மேலும் சுஷாந்த் சிங்கிற்கு அவர் போதை மருந்துகளை கொடுத்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பியது. ரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தாலும், அவருக்கு ஆதரவாக சில குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
உண்மை வெளியே வரும்
இதனிடையே, சமீபத்தில் ரியா சக்ரபோர்த்தி அளித்த பேட்டியைப் பார்த்த பலரும் அவருக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியுள்ளனர். உண்மை தெரியும் முன்னரே ஒருவர் மீது பழி போடுவது தவறு என்றும், முடிவை நாமே சொல்லிவிட்டால், நீதிமன்றம், தீர்ப்பு எல்லாம் எதற்கு என்றும் பலர் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடிகை லட்சுமி மஞ்சு, ரியாவிற்கு ஆதரவாக டுவிட் ஒன்றைப் போட்டார். ரியாவை ஊடகங்கள் அனைத்தும் அரக்கியை போல் சித்தரிப்பதாகவும், அதனால் அவர் குடும்பமே கஷ்டப்படுவதாகவும் லட்சுமி மஞ்சு குறிப்பிட்டிருந்தார். மேலும் உண்மை கண்டிப்பாக வெளியே வரும் என்றும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
ஆதரவு குரல்
அந்த வரிசையில், தற்போது நடிகை டாப்ஸியும் ரியா சக்ரபோர்த்திக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார். லட்சுமி மஞ்சுவின் கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த டாப்ஸி, அவரது கருத்தையும் அதில் பதிவிட்டு உள்ளார். அதில் டாப்ஸி கூறியிருப்பதாவது; “எனக்கு தனிப்பட்ட முறையில் சுஷாந்தையோ, ரியாவையோ தெரியாது. ஆனால், எனக்கு தெரிந்த விஷயம் குற்றவாளி என நிரூபிக்கப்படாத ஒருவரை குற்றவாளி என கூறி நீதித்துறையை முந்திக் கொள்வது மிகவும் தவறு. இதை புரிந்துக்கொள்ள மனிதம் போதுமானது. நீதியை நம்புங்கள். நம் நாட்டின் சட்டத்தை நம்ப வேண்டும். இவ்வாறு டாப்ஸி குறிப்பிட்டுள்ளார். பல முன்னணி நடிகர், நடிகைகள் ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக இருந்த போதிலும், சிலர் ஆதரவு குரல் கொடுப்பது ரியாவுக்கு சற்று ஆறுதல்களை தந்துள்ளது.