வெப்பச்சலனம் காரணமாக மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை (31.08.2020) மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கோவில்பட்டி 3 செ.மீ., தேவகோட்டை 2 செ.மீ., நீலகிரி மாவட்டம் குந்தா பாலம் பகுதியில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், வடக்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.