சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணம் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமங்கலம் 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் வத்ராப், மதுரை விமான நிலையம், ஆண்டிப்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் தலா 3 செ.மீ., திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் 2 செ.மீ., வேப்பூர், முதுகுளத்தூரில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், வடகிழக்கு அரபிக் கடல், குஜராத் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், வடக்கு மஹாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.