வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், அவரது சகோதரி கிம் யோ ஜாங் திடீரென மாயமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோமாவில் அதிபர்?
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை குறித்தும், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்ட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார். இதனிடையே, ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க்கிற்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள்ள அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
திடீர் மாயம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அடுத்து அதிபராக வருவார் என கூறப்படும் சகோதரி கிம் யோ ஜாங் திடீரென மாயமானதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பதாவது; எப்போதும் கிம் ஜாங் உன்னுடனயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கிம் யோ ஜாங், கடந்த ஜூலை 27 முதல் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. கடந்த 25ம் தேதி நடைபெற்ற பொலிட்பீரோ கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவர் என்ன ஆனார், எங்கே சென்றார் என்பது தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை துரோகம் செய்ததாக கடந்த 2013ல் தனது தாய்மாமனும், துணை அதிபருமான ஜங் சங் தக் சுட்டுக்கொல்லப்பட்டதைப் போன்ற நிலை, தமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.