தமிழகத்தின் தலைசிறந்த தொழிலதிபராக மட்டுமல்லாமல் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை குன்றாக திகழ்ந்து மறைந்தவர் வசந்தகுமார். வீட்டில் ஏழாவது பிள்ளையாக பிறந்த இவர், சிறு வயது முதலே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வாழ்க்கையில் சிகரம் தொட்டவர்.
உண்மைக்கு பெயர் போனவர்
சிரித்த முகம்… சிந்தனையில் தெளிவு… கொள்கையில் உறுதி… எப்போதும் விடா முயற்சி… என கடும் உழைப்பால் உயர்ந்த சாதனையாளர் வசந்த அண்ட் கோ உரிமையாளர் வசந்தகுமார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு 1978ம் ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்தார். சாதாரண விற்பனை பிரதிநிதியாக தனது வாழ்க்கையை துவக்கிய வசந்தகுமார், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தனது பெயரில் 412 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து, தான் நேர்மையாக வரி செலுத்தும் இந்திய குடிமகன் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்.
பிராண்ட் அம்பாசிடர்
தன்னுடைய நிறுவனத்திற்கு தானே பிராண்ட் அம்பாசிடர் என்ற தன்னம்பிக்கையுடன் விளம்பரத்தில் தோன்றி வாடிக்கையாளர்களை கவர்ந்த வசந்தகுமார், வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரத்தில் முடியாது என்பதை எல்லாம் முடித்துக்காட்டியவர். தவணை முறை திட்டத்தையும், ஒரு ரூபாய்க்கு வீட்டு உபயோகப்பொருள் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, நடுத்தர மக்களின் வீடுகளுக்கு தனது நிறுவனத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களை கொண்டு சேர்த்த இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்தகுமார். அவரது நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
அரசியலிலும் சாதனை
2008 ஆம் ஆண்டு தன்னுடைய பெயரில் தொலைக்காட்சியை தொடங்கினார் வசந்தகுமார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்காளில் ஒருவராகவும், எம்.எல்.ஏ., எம்.பி.,யாகவும் பதவிகளை வகித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமார், நேற்று இரவு 7 மணி அளவில் மண்ணைவிட்டு மறைந்தார். உழைப்புக்கு உதாரணமாக திகழ்ந்த வசந்தகுமார், மக்கள் மனதில் எப்போதும் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்பது நிதர்சனமான உண்மை.