சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை வித்யா பிரதீப், ‘எக்கோ’ படத்தின் மூலம் நடிகர் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேருகிறார்.
சின்னத்திரை நாயகி
2010 ஆம் ஆண்டு ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பின் விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள், கலரி, மாரி 2 என பல தமிழ் படங்களில் நடித்தார். சமீபத்தில் ஜோதிகா நடித்து OTTயில் வெளியான “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இத்தனை படத்தில் நடித்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காத வித்யா பிரதீப், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘நாயகி’ சீரியல் மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஒத்தைக்கு ஒத்தை, அசுரகணம், தலைவி ஆகிய படங்கள் வரிசையாக வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் இவர் நடிப்பில் மயங்கிய வெள்ளித்திரை, அடுத்தக்கட்ட என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டது.
வெற்றி, தோல்வி
“எக்கோ” என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் வித்யா பிரதீப். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் பிறகு ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற வெற்றிப் படங்களை கொடுக்கத் துவங்கினார். பிறகு வர்ணஜாலம், போஸ், கனாக்கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பம்பரக் கண்ணாலே என்று பல படங்களில் நடித்தும் எதுவும் சரியாக போகவில்லை. பிறகு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் தனது நடிப்பை காட்டினார். அதன்பிறகும் பாகன், ஓம் சாந்தி ஓம், நம்பியார் போன்ற படங்களிலும் அவர் நடித்தார். ஆனால், மீண்டும் அவருக்கு சரியான வெற்றி கிடைக்கவில்லை. தற்போது உன் காதல் இருந்தால், மகா, காக்கி, மிருகா, சம்பவம் போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
‘எக்கோ’
தற்போது ‘எக்கோ’ என்ற படத்தின் ஸ்ரீகாந்தும், வித்யா பிரதீப்பும் இணைந்துள்ளனர். த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். மேலும் ஆஷிஷ் வித்யார்த்தி ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளார். தூள், கில்லி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான கோபிநாத் ‘எக்கோ’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பை துவங்கப் போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் மூலமாக ஸ்ரீகாந்துக்கும், வித்யா பிரதீப்புக்கும் ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.